கடலூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஜனவரி, 2012

தானே புயல் : கடலூர் மாவட்டத்தில் பெரியார் கலைக் கல்லூரி உட்பட அரசு கல்லூரிகளை சீரமைக்க ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு


புவனகிரி:

         கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளை சீரமைக்க ரூபாய் 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். தானேபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பார்வையிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். 

அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறுகையில், 

          "தானே புயலால் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி,  சிதம்பரம், சி.முட்லூர்  அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர்  அரசு கலைக்கல்லூரிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கல்லூரி ஜன்னல் கண்ணாடிகள், காம்பவுண்டு சுவர்கள், மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. இதனை சீரமைக்க 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார். செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலர் மாரிமுத்து, சேர்மன் கீதா உடனிருந்தனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 14 மே, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது: அ.தி.மு.க. கூட்டணியினர் மகிழ்ச்சி

கடலூர்:

        வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியதும், கடலூரில் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் எதிரில் அ.தி.மு.க. கூட்டணியினர் மகிழ்ச்சி ஆரவாரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். 

              பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில், கடலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் முடிவுகளைக் கேட்க நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கல்லூரி முன் கூடியிருந்தனர். வாக்கு எண்ணும் மையத்துக்கு, கடலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் வந்து இருந்தார். ஆனால் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தி வரவில்லை. தி.மு.க.வினரையே அதிகம் காண முடியவில்லை.

               4 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை 40 நிமிடம் தாமதமாகவே தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. முன்னணியில் இருந்தது. இதற்கான அறிவிப்பு வெளியானதும், வெளியில் கூடியிருந்த அ.தி.மு.க. கூட்டணிக் கட்சினர், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பலர் துள்ளிக் குதித்தனர். சரமாரியாக பட்டாசுகளையும், வாண வெடிகளையும் வெடித்துக் கொண்டே இருந்தனர். நகரம் முழுவதுமே ஆங்காங்கே பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. 

         நகரில் சாலை சந்திப்புகளில் எல்லாம் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஹோட்டல்கள் மட்டுமே திறந்து இருந்தன. பகல் ஒரு மணிக்கு மேல் சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றிக் காணப்பட்டன. போலீசார் ரோந்து சுற்றி வந்துகொண்டு இருந்தனர்.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

             கடலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகளைக் கண்டித்து, செய்தியாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமும் தர்னா போராட்டமும் நடத்தினர். 

            கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடந்தது.

             வாக்கு எண்ணிக்கை முதலாவது, இரண்டாவது மாடிகளில் உள்ள அறைகளில் நடந்தது .வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த செய்தியாளர்கள் போலீசாரால் கடுமையாகச் சோதனையிடப்பட்டனர். பேனா கொண்டு செல்லக் கூடாது என்றும் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையாவின் தலையீட்டினால் பின்னர் செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

               வாக்கு எண்ணும் மையத்துக்குள் பலமுறை சென்றுவர அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, செய்தியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த அனுமதி அட்டையை தேர்தல் நடத்தும் அலுவலர்களும், தேர்தல் பார்வையாளர்களும் கொஞ்சமும் மதிக்கவே இல்லை. அனுமதிச் சீட்டுகளை செய்தியாளர்களே அச்சிட்டுக் கொண்டு வந்து இருப்பதாகக் கூட சில அதிகாரிகள் தெரிவித்தனர். 

              வாக்கு எண்ணிக்கையின்போது எதையும் முழுமையாக புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் புகைப்படக்கார்கள் மற்றும் செய்தியாளர்களை, மத்திய ரிசர்வ் போலீஸôர் வெளியேற்றினர். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும், தேர்தல் பார்வையாளர்களிடமும் முறையிட்டும், மத்திய ரிசர்வ் போலீசாரின் நடவடிக்கை சரிதான் என்றனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் செய்தியாளர்கள் பலர் சிற்றுண்டிக்காக தரைத் தளத்துக்கு வந்தனர். மீண்டும் வாக்கு எண்ணும் அறைகளுக்குச் செல்ல முயன்றபோது மத்திய ரிசர்வ் போலீஸôரால் விரட்டியடிக்கப்பட்டனர்.

              செய்தியாளர்களுக்கு இனி அனுமதி இல்லை என்று தேர்தல் பார்வையாளர்கள் கூறிவிட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் செய்தியாளர்களுக்கு அளித்த அனுமதிச்சீட்டு மிகவும் போலியானது என்று கூறியபடி, அவற்றைத் தரையில் வீசி எறிந்து, காலால் மிதித்துச் சிதைத்தனர்.

             எதையும் பொருள்படுத்தாத தேர்தல் நடத்து அலுவலர்களும், தேர்தல் பார்வையாளர்களும் போராட்டம் நடத்தியவர்களைப் பார்த்து விட்டு, அறைகளுக்குள் சென்று விட்டனர். ஜனநாயகத்தின் 4-வது தூண் என்று பேசப்படும் ஊடகங்களுக்கு, தேர்தல் அதிகாரிகள் மரியாதை அளிக்காவிட்டாலும், அவர்களின் உரிமைகளை மதிக்கவாவது தெரிந்து வைத்து இருப்பதுதான் ஜனநாயகத்தின் மாண்பாகும்.

சிதம்பரத்தில்...: 

              சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த மீடியா சென்டரில் எவ்வித வசதியும் செய்யப்படவில்லை. அங்கு வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் முற்றிலும் செயல்படவில்லை. குடிநீர் வசதி கிடையாது. பத்திரிகையாளர் அமர்ந்திருந்த மீடியா சென்டர் இருந்த பகுதியில் உள்ள கேட்டை போலீசார் மூடி அடைத்தனர்.

             இதனால் பத்திரிகையாளர்கள் மீடியா சென்டரில் செயல்படாமல் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை அறைக்கு வெளியே வைத்துவிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து புறக்கணித்து வெளியேறினர்.பின்னர் சிதம்பரம் டிஎஸ்பி டி.கே.நடராஜன், ஏடிஎஸ்பி காதர்மொய்தீன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி சாயபாபா உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி கம்ப்யூட்டர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக உறுதியளிதத்தின் பேரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் பத்திரிகையாளர்கள் உள்ளே சென்றனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more...

கடலூர் பெரியார் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள்

கடலூர்:

             வாக்கு எண்ணும் மையத்தில் செய்தி சேகரிக்கவும், புகைப்படம் எடுக்கவும் செய்தியாளர்களுக்குக் கட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

            கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் உள்ள முதல் தளத்தில் உள்ள அறைகளில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. 

                வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்ததும், அறைகள் உள்ளிட்ட பகுதிகளை படம் எடுக்க 14-4-2011 அன்று செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப் பட்டனர். அடுத்து சில நாள்கள் கல்லூரி வளாக தரைத்தளம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த வாரம், வேட்பாளர்கள் வந்து பார்வையிட்டு, பதிவேட்டில் கையெழுத்துப் போடும் இடம் வரை அனுமதிக்கப் பட்டனர். 

               கடந்த 2 நாள்களாக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை. தேவையானால் வேட்பாளர்கள் வந்து பார்வையிட்டு கல்லூரியைவிட்டு வெளியே வரும்போது புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.  பெரியார் அரசு கலைக் கல்லூரிச் சாலையில் செல்ல முதலில் சில நாள்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கல்லூரிச் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. கல்லூரியை அடுத்துள்ள சில்வர் பீச்சுக்குச் செல்ல, மாற்றுப் பாதையை பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். 

             வாக்கு எண்ணிக்கை கல்லூரி கட்டடத்தில் முதல் தளத்தில் நடைபெறும். வாக்கு எண்ணும் நாளன்று தரைத்தளத்தில் உள்ள தகவல் மையத்தில் மட்டும் செல்போன் பயன்படுத்த, செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  இப்படி தினமும் ஒரு உத்தரவு, தினமும் ஒரு விதிமுறை என்று தேர்தல் ஆணையத்தில் இருந்து தினமும் வந்த வண்ணம் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், தினமும் காலையில் எழுந்ததும் என்ன உத்தரவு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Read more...

வியாழன், 5 மே, 2011

கடலூர் பெரியார் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில் பாம்பு புகுந்ததால் திடீர் பரபரப்பு

கடலூர்:

         கடலூரில் ஓட்டு எண்ணும் மையத்தில் பாம்பு புகுந்ததால் திடீர் பரபரப்பு நிலவியது.

            தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 13ம் தேதி நடந்தது. ஓட்டு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப் பதிவிற்கு பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கடலூர், தேவனாம்பட்டிணம் அரசு பெரியார் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் வைத்து சீலிடப்பட்டது.

             இந்த வளாகத்தில் எவரும் செல்லாத அளவிற்கு துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு படை மற்றும் ஆயுதப்படை போலீசார் என மூன்றடுக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரியை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அதிலிருந்து போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் கல்லூரிக்கு (மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு) பின்னால் 6 அடி நீளமுள்ள பாம்பு ஓன்று ஓட்டு எண்ண அமைத்துள்ள அறையை நோக்கிச் சென்றது. இதனை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்த போலீசார் பார்த்து கீழே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

           இதற்கிடையே கல்லூரி வளாகத்தில் பாம்பு புகுந்தை அறிந்த மாணவர்கள் அங்கு திரண்டனர். கூட்டத்தை கண்டு மிரட்சியடைந்த பாம்பு அப்பகுதியில் இருந்த புதரில் பதுங்கியது. இந்த சம்பவத்தினால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது தகவலறிந்த வன உயிரின ஆர்வலரான பூனம்சந்த் விரைந்து வந்து, புதரில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து எடுத்துச் சென்றார். அதன்பிறகே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளும் நிம்மதியடைந்தனர். ஓட்டு எண்ணும் மையத்தில் பாம்பு புக முயன்ற சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Read more...

புதன், 4 மே, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மே 13, காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்

கடலூர்:
 
            வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் நடைபெறும் வெற்றி ஊர்வலங்கள், பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள், வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்து இருப்பதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கூறினார்.  13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை கூறியது:  

           கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 தொகுதிகளுக்கு கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியிலும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கு, பு.முட்லூர் அரசுக் கலைக் கல்லூரியிலும், திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளுக்கு, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் 13-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 5 மணி முதல் முன்னேற்பாடுகள் தொடங்கும். பொது மேற்பார்வையாளர் முன்னிலையில் வாக்கு எண்ணுவோர் நியமிக்கப்படுவர்.  

             தபால் வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கும், வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்குகள் காலை 8-30 மணிக்கும் தொடங்கும். வாக்கு எண்ணிக்கையில் 300 பேர் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், ஒரு உதவி அலுவலர், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் பணிபுரிவர். வாக்கு எண்ணும் அலுவலர்கள் 13-ம் தேதி காலையில்தான் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படுபவர். குலுக்கல் முறையில்தான் வாக்குப் பதிவு இயந்திரங்களும் மேஜைகளில் கொண்டு வந்து வைக்கப்படும்.  

             வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் முகவர் பணிக்கு வருவோர், காலை 7 மணிக்கே புகைப்படத்துடன் விண்ணப்பத்தை அளித்துவிட வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள், உள்ளாaட்சி அமைப்புகளின் தலைவர்கள், அரசு ஊழியர்கள் முகவர்களாக நியமிக்கப்படக்கூடாது. முகவர்கள், வாக்கு எண்ணும் பணிபுரிவோர், வாக்கு எண்ணிக்கை தொடங்கு முன், ரகசியம் காக்க, உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். ரகசியம் காக்கத் தவறினால், 3 மாதம் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.  

            வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப் கேமராவிலும் விடியோவிலும் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 200 மீட்டர் வரைதான் வாகனங்கள் அனுமதிக்கப்படும். பொதுமக்கள் 100 மீட்டர் தூரம் வரை அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் குடிபோதையில் இருந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் பால்பாயின்ட் பேனா மட்டுமே எடுத்துவர அனுமதிக்கப்படுவர். ஊற்றுப்பேனா, கூர்மையான ஆயுதங்கள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

            100 மீட்டர் தூரம் வரை அனுமதிக்கப்படும் பார்வையாளர்களும் குடிபோதையில் இருந்தால் அப்புறப்படுத்தப்படுவர். இதுவரை 2,064 தபால் வாக்குகள் இதுவரை வாக்குப் பெட்டிகளில் போடப்பட்டு உள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டதும் வாணவெடிகள், பட்டாசுகள் வெடித்தல், சாப்பாடு போடுதல், வெற்றி ஊர்வலங்கள் நடத்துதல் போன்ற செலவினங்களும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். அதனால்தான் வேட்பாளர்கள் 13-6-2011 வரை செலவு கணக்கு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது என்றார் ஆட்சியர்.

Read more...

திங்கள், 25 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

கடலூர்:

               கடலூரில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு, கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரிச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

           கடலூர் பெரியார்  கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. எனவே அந்த 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இக்கல்லூரியில் உள்ள அறைகளில் வைத்து பூட்டி, சீல் வைக்கப்பட்டு உள்ளன. கல்லூரி வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

              கடந்த 20-ம் தேதி இக்கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவருக்குக் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரிவுபசார விழா, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.  அதுமுதல் கல்லூரி வளாகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கல்லூரிச் சாலையின் இரு கோடியிலும், போலீஸ் தடுப்புக் கட்டைகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு 24 மணி நேரமும் கூடுதலாக போலீஸôர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் சில்வர் பீச்சுக்குச் செல்லும் பொதுமக்கள், நேராக கடற்கரைக்குச் செல்லாமல், மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Read more...

வியாழன், 7 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

கடலூர் : 

        கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

           கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய தொகுதி ஓட்டுகளை கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்காக கல்லூரியில் ஒரு பகுதியில் உள்ள கட்டடத்தை முழுவதும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும் நான்கு தொகுதிகளில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, 13ம் தேதி ஓட்டுப்பதிவிற்கு பின்னர் இரவுக்குள் அனைத்து மின்னுணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும் கொண்டு வந்து கல்லூரியில் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

          இதற்காக தேர்தல் ஆணையம் மின்னணு ஓட்டுப் பெட்டியை பாதுகாப்பாக வைப்பதற்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறைக்கு மின் வசதி மற்றும் செங்கற்களால் ஜன்னல்கள் அடைக்கும் பணி என அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Read more...

சனி, 5 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஓட்டு எண்ணும் மையம்: கலெக்டர் பார்வை

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகள் ஓட்டுக்களை எண்ணும் மையத்தை கலெக்டர், எஸ்.பி., ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 13ம் தேதி நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி மற்றும் நெய்வேலி தொகுதிகள் ஓட்டுகளை கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஓட்டு எண்ணும் மையத்தை நேற்று மாலை கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ., முருகேசன், பி.ஆர்.ஓ., முத்தையா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மனோகரன், டி.எஸ்.பி., பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

Read more...

வியாழன், 17 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தி.மு.க. மாணவரணி ஆலோசனைக் கூட்டம்

கடலூர்:
 
             துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று, கடலூர் தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடலூர் பெரியார்  கலைக் கல்லூரி தி.மு.க. மாணவரணி ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 
               ராணி மேரி கல்லூரிக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின் கடலூர் மத்திய சிறையில் 13 நாள்கள் அடைக்கப்பட்டு இருந்தார். இதேபோல் மு.க. ஸ்டாலின் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளுக்கும் கடலூருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும். 
 
 மாவட்டம் முழுவதும் கிராமங்கள்தோறும் மாணவரணியினர் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது. 
 
மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், 
 
ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குதல், 
 
அரசு மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்தல், 
 
மருத்துவ முகாம்கள் நடத்துதல், 
 
மரங்கள் நடுதல், 
 
மாணர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், 
 
விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் 
 
உள்ளிட்ட பணிகளைச் செய்வது, 
 
மாவட்டம் முழுவதும் சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை பிரசாரம் செய்வது, 
 
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், முதல்வர் கருணாநிதிக்கு எதிராவும் குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
                 கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைபபாளர் கு,வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வேல்முருகன், குபேந்திரன், விஜயகுமார், சிவா, கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

சனி, 5 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவருக்கு பாராட்டு

கடலூர் : 

             கடலூர் மாவட்ட மாணவர் காங்., தலைவருக்கு காங்.,சார்பில் பாராட்டுக் கூட்டம் நடந்தது. 
           கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உட்பட 21 கல்லூரிகளில் இருந்து 2,300 மாணவர்கள் காங்., உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் தலைவர், செயலர் உள்பட 10 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநில நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், ஓட்டளிப்பதற்கும் 166 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தேர்தலில் கடலூர் மாவட்ட மாணவர் காங்., தலைவராக தேவனாம்பட்டினம் பெரியார்  கலைக் கல்லூரியைச் சேர்ந்த கலையரசன் தேர்வு செய்யப்பட்டார். 

                      மேலும் நான்கு பேர் பொதுச் செயலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட கலையரசனுக்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. வக்கீல் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் அலமு தங்கவேல், ஜான் சதீஷ், ராமநாதன், ரகுபதி, கார்த்திக், சிவக்குமார், கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more...

புதன், 2 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு

கடலூர்:

           கடலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் கலையரசனுக்கு, மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தனர்

             கடலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடந்தது. 21 கல்லூரிகளைச் சேர்ந்த 2,300 மாணவர்கள் வாக்களித்தனர்.இதில் 166 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வாக்களித்து மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக, கலையரசனைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். வடலூரைச் சேர்ந்த கலையரசன், கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படிக்கிறார். அவருக்குக் கடலூர் மாவட்டக் காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

             மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சந்திரசேகரன் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.நகர காங்கிரஸ் தலைவர் ரகுபதி, மாவட்டக் காங்கிரஸ் செயலர் அலமு தங்கவேலு, முன்னாள் வட்டாரத் தலைவர் கலியமூர்த்தி, நகரச் செயலர் செல்வகுமார், துணைத் தலைவர் கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் மக்களவைத் தொகுதி பொதுச் செயலர் ராமநாதன், சட்டப்பேரவை தொகுதி பொதுச் செயலர் சதீஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Read more...

வியாழன், 6 ஜனவரி, 2011

கடலூர் மண்டல பூப்பந்து விளையாட்டுப் போட்டி: பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ப்பு

கடலூர் : 

            திருவள்ளுவர் பல்கலைக் கழக கடலூர் மண்டல அளவிலான பூப்பந்து விளையாட்டுப் போட்டி கடலூரில் நடந்தது. 

            ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி, பெரியார் கலைக் கல்லூரி, செய்யாறு இந்தியன் அமெரிக்கன் கல்லூரி, புதுச்சேரி கல்லூரிகள் பங்கேற்றன. 

             பெண்கள் பிரிவு போட்டியில் கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, பெரியார் கலைக்கல்லூரி, விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரி, விருத்தாசலம் அரசு கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் சார்பில் அணிகள் பங்கேற்றன. 

               இதில் ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.
 
              போட்டிக்கான ஏற்பாடுகளை கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் செய்திருந்தார். உடற் கல்வி இயக்குனர்கள் வண்ணமுத்து, புவனேஸ்வரி போட்டிகளை நடத்தினர்.

Read more...

வியாழன், 21 அக்டோபர், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

கடலூர்:

                  டலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, விளையாட்டு உபகரணங்களை, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு புதன்கிழமை வழங்கினார்.  

                  பெரியார் கல்லூரி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் 80 மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். அவர்கள் மாலை நேரங்களில் விளையாட, விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து இருந்தனர்.மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கெய்க்வாட் பாபு, கிரிக்கெட் மட்டை, பந்து, வாலிபால் நெட், பந்து, கேரம் போர்டு, செஸ் இறகுப் பந்து, வலை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை, விடுதிக்குச் சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

வெள்ளி, 15 அக்டோபர், 2010

ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்

கடலூர்:

                 ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள், புதன்கிழமை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.

                  பொள்ளாச்சி எம்.ஜி.எம். கல்லூரியில், தமிழக வரலாற்றுப் பேரவை 17-வது ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை 3-ம் ஆண்டு மாணவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரர் கோயில் சிற்பக்கலை, திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில்- வரலாற்றுப் பார்வை, திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் கல்வெட்டுகள், வள்ளலாரின் வாழ்க்கை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்- சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். கூட்டத்தின்போது இந்த ஆய்வுக் கட்டுரைகள் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

                    கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் காந்திமதியின் வழிகாட்டுதல்படி, அத்துறை பேராசிரியர்கள் விஜயலட்சுமி, நா.சேதுராமன் ஆகியோர், மாணவர்களைத் தயார் செய்து, பொள்ளாச்சி வரலாற்றுப் பேரவை கூட்டத்துக்கு அழைத்துச் சென்று இருந்தனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களை கல்லூரியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கநாதன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

Read more...

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


கடலூர்:

                 கடலூர் பெரியார்  கலைக்கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

               இக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த மாணவர் ராஜ்குமார் அண்மையில் மின்சாரம் பாய்ந்து இறந்தார். அவரது மறைவுக்கு கல்லூரியின் சம்பந்தப்பட்ட துறை ஆசிரியர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இப்பிரச்னையில் தற்போது கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவர் மீது மாணவர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.  அவர் முறையாகப் பாடம் நடத்துவது இல்லை என்பது உள்ளிட்ட புகார்களை தெரிவித்து மாணவர்களில் ஒரு பிரிவினர் செவ்வாய்க்கிழமை வகுப்பறைகளைப் புறக்கணித்தனர்.

                 புதன்கிழமை இதே பிரச்னை காரணமாக 30 மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துக் கலைந்து சென்றனர்.





Read more...

புதன், 18 ஆகஸ்ட், 2010

ஆசிரியர்களைக் கண்டித்து வகுப்பறைகளை புறக்கணித்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்

கடலூர்:

             ஆசிரியர்களைக் கண்டித்து கடலூர் பெரியார்  கலைக் கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர், செவ்வாய்க்கிழமை வகுப்புகளை விட்டு வெளியேறினர். 

                இதே கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்தவர் ராஜ்குமார். வெங்கடாம்பேட்டை வடக்குத் தெரு காலனியைச் சேர்ந்தவர். அவர் கடந்த 9-ம் தேதி தனது ஊரில் இருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இதற்கு ஆசிரியர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்தும், தகுதி வாய்ந்த கௌரவ  விரிவுரையாளர்களை 2-ம் சுழற்சி வகுப்புகளுக்கு நியமிக்க வேண்டும். மாணவர்களிடையே ஜாதி உணர்வை தூண்டுவோர், மற்றும் மாணவர்களிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளும் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

                        இதற்காக ஒரு பகுதி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்பறைகளை விட்டு வெளியேறினர். அவர்களைக் கல்லூரி முதல்வர் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மற்ற வகுப்புகள் வழக்கம்போல் செயல்பட்டன.



Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரிக்கு 1 லட்சம் நிதி: கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன்

கடலூர்:
 
           கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தனது சொந்த நிதியில் இருந்து | 5 லட்சத்தில், கல்லூரி மற்றும் பள்ளிகளில் அறக்கட்டளைகளை உருவாக்கி இருக்கிறார். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழாவும், பேச்சுக் கலைப் பயிலரங்கமும் வியாழக்கிழமை நடந்தது.

விழாவில் அய்யப்பன் எம்எல்ஏ பேசுகையில், 

              "இக்கல்லூரியில் விழாக்கள் நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் வகையில், "டாக்டர் கலைஞர் தமிழ் செம்மொழி அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கி, அதற்குத் தேவையான நிதி | 1 லட்சத்தைத் எனது சொந்த நிதியில் இருந்து வழங்குகிறேன்' என அறிவித்து, அந்தத் தொகையை உடனேயே வழங்கினார். 

            மேலும் கடலூர் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முதுநகர் பிலோமினாள் மேல்நிலைப் பள்ளி, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கும், தலா | 1 லட்சத்தை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி, டாக்டர் கலைஞர் தமிழ் செம்மொழி அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அய்யப்பன் தெரிவித்தார். 

                கல்லூரி விழாவுக்கு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழாழி கொற்கை வேந்தன் தலைமை வகித்தார். விழாவை கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரங்கநாதன் தொடங்கி வைத்தார். புதுவை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் இளங்கோ சிறப்புரை நிகழ்த்தினார் .பேராசிரியர் அர்த்தநாரி வரவேற்றார். முனைவர் குமரன் நன்றி கூறினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP