கடலூர் பெரியார் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில் பாம்பு புகுந்ததால் திடீர் பரபரப்பு
கடலூர்:
கடலூரில் ஓட்டு எண்ணும் மையத்தில் பாம்பு புகுந்ததால் திடீர் பரபரப்பு நிலவியது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 13ம் தேதி நடந்தது. ஓட்டு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப் பதிவிற்கு பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கடலூர், தேவனாம்பட்டிணம் அரசு பெரியார் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் வைத்து சீலிடப்பட்டது.
இந்த வளாகத்தில் எவரும் செல்லாத அளவிற்கு துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு படை மற்றும் ஆயுதப்படை போலீசார் என மூன்றடுக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரியை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அதிலிருந்து போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் கல்லூரிக்கு (மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு) பின்னால் 6 அடி நீளமுள்ள பாம்பு ஓன்று ஓட்டு எண்ண அமைத்துள்ள அறையை நோக்கிச் சென்றது. இதனை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்த போலீசார் பார்த்து கீழே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே கல்லூரி வளாகத்தில் பாம்பு புகுந்தை அறிந்த மாணவர்கள் அங்கு திரண்டனர். கூட்டத்தை கண்டு மிரட்சியடைந்த பாம்பு அப்பகுதியில் இருந்த புதரில் பதுங்கியது. இந்த சம்பவத்தினால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது தகவலறிந்த வன உயிரின ஆர்வலரான பூனம்சந்த் விரைந்து வந்து, புதரில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து எடுத்துச் சென்றார். அதன்பிறகே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளும் நிம்மதியடைந்தனர். ஓட்டு எண்ணும் மையத்தில் பாம்பு புக முயன்ற சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக