கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்:
கடலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகளைக் கண்டித்து, செய்தியாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமும் தர்னா போராட்டமும் நடத்தினர்.
கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடந்தது.
வாக்கு எண்ணிக்கை முதலாவது, இரண்டாவது மாடிகளில் உள்ள அறைகளில் நடந்தது .வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த செய்தியாளர்கள் போலீசாரால் கடுமையாகச் சோதனையிடப்பட்டனர். பேனா கொண்டு செல்லக் கூடாது என்றும் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையாவின் தலையீட்டினால் பின்னர் செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் பலமுறை சென்றுவர அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, செய்தியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த அனுமதி அட்டையை தேர்தல் நடத்தும் அலுவலர்களும், தேர்தல் பார்வையாளர்களும் கொஞ்சமும் மதிக்கவே இல்லை. அனுமதிச் சீட்டுகளை செய்தியாளர்களே அச்சிட்டுக் கொண்டு வந்து இருப்பதாகக் கூட சில அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது எதையும் முழுமையாக புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் புகைப்படக்கார்கள் மற்றும் செய்தியாளர்களை, மத்திய ரிசர்வ் போலீஸôர் வெளியேற்றினர். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும், தேர்தல் பார்வையாளர்களிடமும் முறையிட்டும், மத்திய ரிசர்வ் போலீசாரின் நடவடிக்கை சரிதான் என்றனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் செய்தியாளர்கள் பலர் சிற்றுண்டிக்காக தரைத் தளத்துக்கு வந்தனர். மீண்டும் வாக்கு எண்ணும் அறைகளுக்குச் செல்ல முயன்றபோது மத்திய ரிசர்வ் போலீஸôரால் விரட்டியடிக்கப்பட்டனர்.
செய்தியாளர்களுக்கு இனி அனுமதி இல்லை என்று தேர்தல் பார்வையாளர்கள் கூறிவிட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் செய்தியாளர்களுக்கு அளித்த அனுமதிச்சீட்டு மிகவும் போலியானது என்று கூறியபடி, அவற்றைத் தரையில் வீசி எறிந்து, காலால் மிதித்துச் சிதைத்தனர்.
எதையும் பொருள்படுத்தாத தேர்தல் நடத்து அலுவலர்களும், தேர்தல் பார்வையாளர்களும் போராட்டம் நடத்தியவர்களைப் பார்த்து விட்டு, அறைகளுக்குள் சென்று விட்டனர். ஜனநாயகத்தின் 4-வது தூண் என்று பேசப்படும் ஊடகங்களுக்கு, தேர்தல் அதிகாரிகள் மரியாதை அளிக்காவிட்டாலும், அவர்களின் உரிமைகளை மதிக்கவாவது தெரிந்து வைத்து இருப்பதுதான் ஜனநாயகத்தின் மாண்பாகும்.
சிதம்பரத்தில்...:
சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த மீடியா சென்டரில் எவ்வித வசதியும் செய்யப்படவில்லை. அங்கு வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் முற்றிலும் செயல்படவில்லை. குடிநீர் வசதி கிடையாது. பத்திரிகையாளர் அமர்ந்திருந்த மீடியா சென்டர் இருந்த பகுதியில் உள்ள கேட்டை போலீசார் மூடி அடைத்தனர்.
இதனால் பத்திரிகையாளர்கள் மீடியா சென்டரில் செயல்படாமல் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை அறைக்கு வெளியே வைத்துவிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து புறக்கணித்து வெளியேறினர்.பின்னர் சிதம்பரம் டிஎஸ்பி டி.கே.நடராஜன், ஏடிஎஸ்பி காதர்மொய்தீன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி சாயபாபா உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி கம்ப்யூட்டர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக உறுதியளிதத்தின் பேரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் பத்திரிகையாளர்கள் உள்ளே சென்றனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக