கடலூர் பெரியார் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள்
கடலூர்:
வாக்கு எண்ணும் மையத்தில் செய்தி சேகரிக்கவும், புகைப்படம் எடுக்கவும் செய்தியாளர்களுக்குக் கட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் உள்ள முதல் தளத்தில் உள்ள அறைகளில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்ததும், அறைகள் உள்ளிட்ட பகுதிகளை படம் எடுக்க 14-4-2011 அன்று செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப் பட்டனர். அடுத்து சில நாள்கள் கல்லூரி வளாக தரைத்தளம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த வாரம், வேட்பாளர்கள் வந்து பார்வையிட்டு, பதிவேட்டில் கையெழுத்துப் போடும் இடம் வரை அனுமதிக்கப் பட்டனர்.
கடந்த 2 நாள்களாக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை. தேவையானால் வேட்பாளர்கள் வந்து பார்வையிட்டு கல்லூரியைவிட்டு வெளியே வரும்போது புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். பெரியார் அரசு கலைக் கல்லூரிச் சாலையில் செல்ல முதலில் சில நாள்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கல்லூரிச் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. கல்லூரியை அடுத்துள்ள சில்வர் பீச்சுக்குச் செல்ல, மாற்றுப் பாதையை பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
வாக்கு எண்ணிக்கை கல்லூரி கட்டடத்தில் முதல் தளத்தில் நடைபெறும். வாக்கு எண்ணும் நாளன்று தரைத்தளத்தில் உள்ள தகவல் மையத்தில் மட்டும் செல்போன் பயன்படுத்த, செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்படி தினமும் ஒரு உத்தரவு, தினமும் ஒரு விதிமுறை என்று தேர்தல் ஆணையத்தில் இருந்து தினமும் வந்த வண்ணம் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், தினமும் காலையில் எழுந்ததும் என்ன உத்தரவு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக