கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது: அ.தி.மு.க. கூட்டணியினர் மகிழ்ச்சி
கடலூர்:
வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியதும், கடலூரில் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் எதிரில் அ.தி.மு.க. கூட்டணியினர் மகிழ்ச்சி ஆரவாரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.
பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில், கடலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் முடிவுகளைக் கேட்க நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கல்லூரி முன் கூடியிருந்தனர். வாக்கு எண்ணும் மையத்துக்கு, கடலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் வந்து இருந்தார். ஆனால் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தி வரவில்லை. தி.மு.க.வினரையே அதிகம் காண முடியவில்லை.
4 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை 40 நிமிடம் தாமதமாகவே தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. முன்னணியில் இருந்தது. இதற்கான அறிவிப்பு வெளியானதும், வெளியில் கூடியிருந்த அ.தி.மு.க. கூட்டணிக் கட்சினர், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பலர் துள்ளிக் குதித்தனர். சரமாரியாக பட்டாசுகளையும், வாண வெடிகளையும் வெடித்துக் கொண்டே இருந்தனர். நகரம் முழுவதுமே ஆங்காங்கே பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
நகரில் சாலை சந்திப்புகளில் எல்லாம் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஹோட்டல்கள் மட்டுமே திறந்து இருந்தன. பகல் ஒரு மணிக்கு மேல் சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றிக் காணப்பட்டன. போலீசார் ரோந்து சுற்றி வந்துகொண்டு இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக