கருத்தரங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்தரங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 டிசம்பர், 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 10-வது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பேரிடர் விழிப்புணர்வு நாள் கருத்தரங்கம் 26.12.2014 அன்று நடைபெற்றது

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 10-வது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பேரிடர் விழிப்புணர்வு நாள் கருத்தரங்கம் 26.12.2014 அன்று நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ந.கண்ணன் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத் தலைவர் க.மனோகரன், தாவரவியல் துறைத் தலைவர் ச.கீதாதேவி, ஆங்கிலத் துறைத் தலைவர் ரா.ரவி, கணினி அறிவியல் துறைத் தலைவர் கா.கீதா ஆகியோர் பேசினர். முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் சுனாமி தொடர்பான பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. 

பேச்சுப் போட்டியில் ச. உமாமகேஸ்வரி, ப.பாண்டித்துரை, கட்டுரைப் போட்டியில் த. சந்தியா, பு.கெளதமன், ஓவியப் போட்டியில் ச. சம்பத்குமார், சே. அறிவுடைநம்பி ஆகியோர் முதல் 2 இடங்களைப் பிடித்தனர். இவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசு வழங்கினார். கருத்தரங்கில் தமிழ்த் துறைத் தலைவர் சு.தமிழாழிக்கொற்கைவேந்தன் வரவேற்பு உரையாற்றினார். கணிதத் துறைத் தலைவர் சி.சிவசண்முகராஜா நன்றி கூறினார். 










Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 31 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் மாநில அளவிலான தமிழ் கருத்தரங்கு 29.01.2014 அன்று நடைபெற்றது.

29.01.2014 (புதன்கிழமை) அன்று  நடைபெற்ற கருத்தரங்கு தொடக்க விழாவுக்கு பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.  தமிழ்த் துறை தலைவர் தமிழாழிக்  கொற்கை வேந்தன் வரவேற்றார். பேராசிரியர் அர்த்தநாரி அறிமுக உரையாற்றினார்.

புதுச்சேரி மாநில தமிழ் சங்கத் தலைவர் முத்து, கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினார். "சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களும், நாட்டுப்புற மீனவர் பாடல்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தொடக்க விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் 30 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கு 30.01.214 (வியாழக்கிழமை) அன்று நிறைவடைந்தது.











Read more...

வெள்ளி, 24 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம் வருகிற 29ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

மாநில அளவிலான இந்த செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களும் நாட்டுப்புற மீனவர் பாடல்களும் எனும் தலைப்பில் நடைபெறுகிறது. இக் கருத்தரங்கம் நடத்துவதற்கான நிதியை சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்குகிறது. 30-க்கும் மேற்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களும், கல்லூரி பேராசிரியர்களும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கவுள்ளனர். கருத்தரங்கினை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முத்துவேலு தொடங்கி வைக்கிறார். சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த் துறை தலைவர் முனைவர் மகாலிங்கம் சான்றிதழ்களை வழங்கி நிறைவுரையாற்றுகிறார். கருத்தரங்கின் தலைவராக கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளராக தமிழ்த் துறை தலைவர் தமிழாழிக்கொற்கை வேந்தன் செயல்பட உள்ளனர். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 25 டிசம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை (24.12.2013) அன்று நடைபெற்றது. 

கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை பேராசிரியர் மனோகரன் வரவேற்றார். இந்தியாவில் கிரெடிட் கார்டு மோசடிகள் என்ற தலைப்பில் அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலர் மருதவாணன், ஊக வணிகத்தில் விதிமுறைகளும் நுகர்வோர் பாதுகாப்பும் என்ற தலைப்பில் வழக்குரைஞர் கதிர்வேல் பேசினர். நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஜெனீவா உடன்பாடு குறித்த கருத்தரங்கு

கடலூர்:

 கடலூர்  பெரியார் கலைக் கல்லூரியில் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், ஜெனீவா உடன்பாடு குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. 

இதில் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்துப் பேசியது: 

ஜெனீவா உடன்பாட்டை 187 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. உலக அளவில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போர் நடந்து கொண்டிருக்கிறது. போரினால் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்வதே ஜெனிவா உடன்பாட்டின் நோக்கம் என்றார். பிரம்மா குமாரிகள் இளைஞர் சைக்கிள் ஊர்வலக் குழு மேலாளர் ரவி, நாமக்கல் மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி ஆகியோர் பேசினர். விழாவில், சைக்கிள் ஊர்வலம் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 25 செப்டம்பர், 2013

தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் தமிழக வரலாற்றுப் பேரவையின் இருபதாவது ஆண்டுக் கருத்தரங்கில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு

   தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் தமிழக வரலாற்றுப் பேரவையின் இருபதாவது ஆண்டுக் கருத்தரங்கம்  செப்டம்பர்  20, 21 மற்றும் 22, ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. 

        கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் வி. ராயப்பன் அவர்களின் வழிகாட்டுதலில், கல்லூரி முதல்வர் அவர்களின் ஒப்புதலோடு வரலாற்றுத்துறை முதுகலை மாணவர்கள் 18 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். மாணவர்களை வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் முனைவர் நா. சேதுராமன், முனைவர் இ. விஜயலட்சுமி ஆகியோர் பொறுப்பேற்று அழைத்துச் சென்றனர்.   

    கருத்தரங்கில் கலந்து கொண்ட துறைத்தலைவர் வி. ராயப்பன், பேராசிரியர்கள் முனைவர் நா. சேதுராமன், முனைவர் இ. விஜயலட்சுமி, கௌரவ விரிவுரையாளர் ரா. சந்தோஷ் மற்றும் மாணவர்கள் ஜெ. ஜெயசுதா, ர. ஜெயலலிதா, பா. கனிமொழி, எஸ்.மஞ்சுளா, ப. மாலா, அ. சரண்யா, ர. சத்யபாமா, ரா. செல்வி, அ. தமிழரசன், தி. அமுல்ராஜ் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.         

அவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரைகள் முறையே பின்வருமாறு: 

“பெஞ்சமின் ராபின்ஸ்: ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பொறியாளரின் வாழ்க்கை வரலாறு”,

 “கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்: தமிழகத்தின் காந்தியச் செயற்பாட்டாளர்”,

 “தமிழ்நாட்டில் தேவதாசிகள் முறை ஒழிப்பில் பெண் சமுதாய சீர்திருத்தவாதிகள்”, 

“இரட்டை மலை சீனிவாசன்: வாழ்வும் சாதனைகளும்”, 

“தில்லையாடிவள்ளியம்மை: வாழ்வும், பணிகளும்”, 

“கடலூர் புனித டேவிட் கோட்டையின் வரலாறு – ஒர் ஆய்வு”, 

“திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் சிற்பங்கள் – ஓர் ஆய்வு”, 

“திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்றுச் செய்திகள் – ஓர் ஆய்வு”, 

“திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டுகள்: ஓர் ஆய்வு”, 

“திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் கோயிலின் வளர்ச்சி - ஒரு வரலாற்றுப் பார்வை”,

 “திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் கல்வெட்டுக்கள்–ஓர் ஆய்வு”, 

“கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் – ஓர் ஆய்வு”, 

  மற்றும் “பல்லவர் காலப் பனைமலை ஓவியங்கள்”.        

  அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் நிலையிலேயே மாணவர்கள் மிகச் சிறப்பான சான்றுகளுடன் ஆய்வுக்கட்டுரைகளைத் தயார்செய்து சிறப்பாகச் சமர்ப்பித்ததை கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.       

   மேலும், தமிழக வரலாற்றுப் பேரவையின் செயற்குழுவில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் நா. சேதுராமன் அவர்கள் தமிழக வரலாற்றுப் பேரவை ஆய்வுக்கட்டுரைத் தொகுதியின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.          
    ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களையும், மாணவர்களையும் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

Read more...

சனி, 17 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - புகைப்படங்கள்

பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கத்தின் புகைப்படங்கள் 



தேசியக் கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்துகிறார் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் வி. ராயப்பன்



தேசியக் கருத்தரங்கில் தலைமையுரை நிகழ்த்துகிறார் கல்லூரி முதல்வர் வி.என். விஸ்வநாதன்




சிறப்பு விருந்தினர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கல்லூரி முதல்வர் வி.என். விஸ்வநாதன் அவர்கள், அருகில் கருத்தரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்
 
 

தேசியக் கருத்தரங்க துவக்கவிழா சிறப்புரை நிகழ்த்துகிறார் புதுதில்லி இந்திய வரலாற்றாய்வுக் கழக உறுப்பினர் பேராசிரியர் நா. இராஜேந்திரன் அவர்கள்
 
 


தேசியக் கருத்தரங்க நிறைவுவிழா சிறப்புரை நிகழ்த்துகிறார் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கலைப்புல முதல்வர் முனைவர் கே. ஜான்குமார் அவர்கள்
 
 


தேசியக் கருத்தரங்கில் கலந்து கொண்டோருக்கு நன்றி கூறுகிறார் தேசியக் கருத்தரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்

Read more...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பொன் விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு வரலாற்றுத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பொன் விழா ஆண்டு நிறைவு பெறுவதை  ஒட்டி  வரலாற்றுத் துறை சார்பில் ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 12, 2003 நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கம் குறித்து முன்னணி நாளேடுகளில் வந்த செய்திகளின் தொகுப்பு














Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - நிறைவு விழா

  பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை, 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழா நேற்று மாலை (02.08.2013 - வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது. 

பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

      பெரியார் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டின் துவக்கத்தையொட்டி, கல்லூரியின் 50 ஆண்டு கால வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிகள் தொடங்கப்படுகின்றன, நிறைவு விழாவில் அது நூலாக வெளியிடப்படும். மேலும், கடலூரின் காலனியாதிக்க வரலாற்றை ஆவணப்படுத்துகின்ற வகையில், இந்த இரு நாள் தேசியக் கருத்தரங்கில் சமப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளியிடப்படும். ஒரிரு மாதங்களுக்குள்ளாகவே அப்பணி செய்து முடிக்கப்படும். மேலும், இது போன்ற தேசியக் கருத்தரங்குகளை கல்லூரியில் தொடர்ந்து நடத்துவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.   

       திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கே. ஜான்குமார் அவர்கள் தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழாப்பேருரை நிகழ்த்தினார்.

 அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம் நிலைபெற்றதற்கு அக்காலகட்டத்தில் அப்பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்களின் தாராள வாணிபக் கொள்கையே காரணம். அக்கொள்கையின் காரணமாக அவர்கள் காலனியாதிக்கச் சக்திகளுக்கு கடற்கரையோரா நகரங்களில் வாணிபம் செய்வதற்கு அனுமதி அளித்தனர். அவ்வகையில் அனுமதி பெற்ற அயல்நாட்டவர் காலப்போக்கில் கடல்சார் வாணிபத்தையும், கடலையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டனர். அதன்பிறகு அவர்களுக்கு அனுமதியளித்த மன்னர்களே கடல்கடந்து பிறநாடுகளோடு வாணிபம் செய்வதற்கு காலனியாதிக்கச் சக்திகளிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசுக் கல்லூரியில் இது போன்ற தேசியக் கருத்தரங்குகள் நடத்தப்படுவது ஆச்சரியம் அளிக்கக் கூடியதாகும். இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.     

     இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசியக் கருத்தரங்கில், கடலூரின் காலனியாதிக்க வரலாறு குறித்த 35 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

    கருத்தரங்கில் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகழ்மிக்க மற்றும் அனுபவம் மிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.      

    நிறைவுவிழா நிகழ்ச்சியில், முன்னதாக பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. இராயப்பன் அவர்கள் வரவேற்றார்.        

    நிறைவாக, தேசியக் கருத்தரங்கத்தின் இயக்குநரும் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.   

    பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பிரபா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் தி. சிவகாமசுந்தரி, நா. தெய்வாம்சம், முனைவர் வீ. ரேவதி, முனைவர். இ. விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய கீதத்துடன் கருத்தரங்க நிறைவு விழா இனிதே நிறைவுற்றது.    

 தேசியக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

 1.  கடலூரின் காலனியாதிக்க கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

2. கடலூரின் வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் கடலூர் வரலாற்று ஆவண மையம் ஒன்றை கடலூரில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை விடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

3. வரலாற்றுப் பாரம்பரியச் சின்னமான புனித டேவிட் கோட்டை பராமரிப்பிலாத நிலையில் இருக்கிறது. அதனைப் புனரமைக்க வேண்டுமென்றும், அங்கு வரும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அக்கோட்டை குறித்த வரலாற்றைக் காட்சிப் படுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசையும், மத்திய அரசின் தொல்லியல் துறையையும் கேட்டுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

பார்க்க: 

 



Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - துவக்கவிழா

பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை, 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடத்துகின்ற தேசியக் கருத்தரங்கத்தின் துவக்க விழா இன்று (01.08.2013 - வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது.      

    பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். 

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

கடலூர் நகரின் வரலற்றுச் சிறப்பு மிக்க நகரம். சோழமண்டலக் கடற்கரையில், 1748 முதல் 1752 வரையில் அதுவே ஆங்கிலேயர்களில் தலைமையிடமாக இருந்தது. கெடிலம் நதிக்கரையில் தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ள செயின்ட் டேவிட் கோட்டை இன்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தின் எச்சமாக இருக்கிறது. 1756-ல் ராபர்ட் கிளைவ் இக்கோட்டையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1653-ம் ஆண்டு இந்து வணிகர் ஒருவரால் கட்டப்பட்ட இக்கோட்டை, 1677-ல் சிவாஜி செஞ்சியைக் கைப்பற்றிய பிறகு மராத்தியர்களில் கைக்குப் போனது, பின்னர் ஆங்கிலேயர்கள் அதனை வாங்கினர். அதற்கென ஒரு புதிய முறையைக் கையாண்டனர். டேவிட் கோட்டையிலிருந்து கடலூர் நகரத்தை நோக்கி பல திசைகளிலும் பீரங்கியால் சுட்டனர். குண்டுகள் விழுந்த இடம் வரையிலான பகுதிகளைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர். அவ்வாறு குண்டு விழுந்த இடங்கள் இன்றும் குண்டு உப்பலவாடி, குண்டுசாலை, குண்டுசாவடி என்றே அழைப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் தங்களின் குடியேற்றங்களை உருவாக்கினர்.        

தேசியக் கருத்தரங்கத்தை குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்த, புது தில்லி, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக உறுப்பினரும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப்புல முதல்வரும், வரலாற்றுத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்கள் கருத்தரங்கத் துவக்க விழா உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

      கடல்சார் வரலாறு என்பது கடலில் மனிதனுடைய நடவடிக்கைகளின் பற்றிய ஆய்வாகும். அதில் தேசிய மற்றும் பிராந்திய வரலாறுகள் முதன்மையானதாக இருந்தபோதிலும், பெரும்பாலும் வரலாற்றின் ஒரு பரந்துபட்ட கருத்தியல் ரீதியிலான கூறுபாடு உள்ளடக்குகின்ற ஒரு உலகளாவிய அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றது. ஒரு கல்வி சார்ந்த பாடமாக, துறைகளின் தரநிலை எல்லைகளைத் தாண்டி பெரும்பாலும் சமுத்திரங்கள், கடல்கள், மற்றும் உலகின் முக்கிய நீர்வழிகள் என மனித குலத்தின் பல்வேறு உறவுகளைப் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது. கடல்சார் வரலாறு கப்பல்கள், சரக்குப் போக்குவரத்து, கடல் பயணம் மற்றும் மாலுமிகளை சம்பந்தப்பட்ட கடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து விளக்கமளிக்கிறது. கடல்சார் வரலாறு காலஓட்டத்தில் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. பண்டைய காலங்களில் வணிகம் மற்றும் வர்த்தகமே பெருமளவில் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. உதாரணமாக, சிந்து சமவெளி நாகரிக இடமான லோத்தலில் கப்பல் கட்டும் தொழில் நடைபெற்றது. எகிப்து, உர் மற்றும் மெசபடோமியா மற்றும் சிந்து நாகரிங்களுக்கு இடையே தீவிர வணிகரீதியான உறவுகள் இருந்தன. சங்ககாலத்தில் சங்ககால மன்னர்கள் இலங்கையின் மீது தொடர்ந்து போர் தொடுத்து அங்கிருந்து கைதிகளைக் கொண்டுவந்து காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக அவர்களைப் பயன்படுத்தினர் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. தமிழர்கள் அடிப்படையில் செல்வத்தைச் சம்பாதிக்க ஆழ்கடல்களைப் பயன்படுத்தினர். “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது தமிழ் பழமொழி ஆகும். இந்தக் கருத்தரங்கு சில முக்கிய அம்சங்களை முன்னிலைப் படுத்துகிறது. முதலில் உள்ளூர் வரலாறே அடிப்படையில் அதன் முக்கியக் கருப் பொருளாக இருக்கிறது, அதாவது, ஐரோப்பிய குடியேற்றங்கள் மற்றும் காலனியாதிக்கத்தின் போது கடலூரின் பங்கு. இரண்டாவதாக, இரண்டாவதாக, ஐரோப்பிய கடல்வழி வர்த்தகத்தின் தன்மையின் மீது அது கவனம் செலுத்துகிறது. காலனி ஆதிக்க கால கடல் வணிகமானது விவசாயத்தை வர்த்தகமயமாக்குகின்ற செயல்முறையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவிற்கு பருத்தி துணிகளை இறக்குமதி செய்தல். இந்த கருத்தரங்கமானது, துறைமுகங்கள் ஏற்படுத்தப்படுதல், வர்த்தக வழிகள், வானிலையை கண்காணித்தல், கப்பல்கட்டுமானம், புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம் போன்ற ஒரு பரந்த நோக்கெல்லையைக் கொண்டிருக்கிறது. புதுதில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில் ஆதரவில் நடைபெறும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கின் விவாதங்கள் ஒரு தொகுக்கப்பட்ட புத்தக வடிவில் வெளியிடப்படவேண்டும். தென் இந்திய கடல்சார் வரலாறு குறித்து அதிலும் குறிப்பாக தமிழ்நாடு குறித்து மிகச் சில படைப்புகளே இருக்கின்றன. இந்நிலையில் இந்தக்கருத்தரங்கின் ஆய்வுக் கட்டுரைகள், உரைகள், விவாதங்கள் நிரந்தரமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.         

      இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசியக் கருத்தரங்கில், “கடற்கரையை அளவிடுதலில் சோழ மண்டலக் கடற்கரை அனுபவங்கள்”, “காலனியாதிக்க காலத்தில் கடலூர் துறைமுக இஸ்லாமிய கடல் வணிகர்களும், தென்கிழக்காசிய வணிக வலைப்பின்னலும்”, “ஆங்கிலேயர் ஆட்சியில் கடலூர் நகரமயமாதலும், ஜவுளி வணிகமும்”, “பதினெட்டாம் நூற்றாண்டில் தென்கிழக்கு மற்றும் தூரக் கிழக்கு ஆசியாவுடன் பாண்டிச்சேரியின் கடல்சார் வாணிபம்”, “கடலூரில் கடல்சார் வாணிபம்”, “டென்மார்க் காலனியான தரங்கம்பாடியில் சமயம் மற்றும் கல்வி”, “பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெப்ப மண்டல சூறாவளிகளும் கடலூர் மாவட்டத்தில் அதன் தாக்கமும்” “ஆரம்பகாலத் தமிழகம் குறித்த அயல்நாட்டவரின் குறிப்புகள்”, “மத்திய காலத்தில் பழவேற்காடு மற்றும் நாகபட்டினம் துறைமுகங்கள்”, “வாணிபமும் சமூகமும்”, “சதுரங்கப்பட்டிணம் போர்”, “சோழமண்டலக் கடற்கறையின் கடல்சார் வாணிபம்”, “கர்நாடகத்தில் ஆங்கிலேய-பிரெஞ்சு மோதல்களும், கடலூரில் அதன் தாக்கமும்”, “தரங்கம்பாடி மீதான டென்மார்க்கின் மேலாதிக்கம்”, “மேலாதிக்கம் செலுத்துதலில் உள்ளூர் மக்களைப் பயன்படுத்துதல்”, “சோழ மண்டலக் கடற்கரையில் ஐரோப்பிய வாணிபக் கம்பெனிகளின் போட்டி”, “காலனியாக்க சக்திகளும் அவற்றின் கொள்கைகளும்”, “கடலூரில் காலனியாதிக்க கட்டடக்கலை”, “சாதி மற்றும் மதத்தின் மீது பிரெஞ்சு காலனியாதிக்கக் கொள்கைகளின் தாக்கம்”, “பரங்கிப்பேட்டையில் ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்க வாணிபம்”, “கடலூர் முற்றுகை”, “சென்னைத் துறைமுகத்தின் வரலாற்று முக்கியத்துவம்”, “கொற்கை, காயல் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களின் வளர்ச்சி”, “பறையர்களும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னை இராணுவமும்”, “மேஜர் ஸ்டிஞ்சர் லாரன்சும், புனித டேவிட் கோட்டை பாதுகாக்கப்படலும்”, “கடலூர் பிராந்தியத்தில் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி” உள்ளிட்டவை குறித்த ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.        

          கருத்தரங்கில் முனைவர் கே. ஜான்குமார், பிஷப் ஹீபர் கல்லூரி, முனைவர் என். அதியமான், தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் எஸ். ராஜவேலு, தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் எஸ்.என். நாகேஸ்வர ராவ், சர் தியாகராயர் கல்லூரி, முனைவர் எஸ். பாபு, காஞ்சி மாமுனிவர் முதுகலைப் படிப்புகள் மையம், புதுச்சேரி, முனைவர் கே. கன்னையா, கடலூர், முனைவர் எம்.மாணிக்கம், அவ்வையார் கல்லூரி, காரைக்கால், முனைவர் ஜே. ராஜா முகம்மது, முன்னாள் அருங்காட்சியக துணை இயக்குநர், தமிழ்நாடு, முனைவர் என். அழகப்பன், முதல்வர், செட்டிநாடு கல்லூரி, முனைவர் எஸ். ஜெயசங்கர், முதல்வர், ஸ்ரீ வாசவி கல்லூரி, முனைவர் ஜூலியஸ் விஜயகுமார், பொறையார், முனைவர் கே.ஆர். சங்கரன், ஏ.வி.சி. கல்லூரி, முனைவர் டி. அசோகன், பாரதிதாசன் பல்கலைக்கழகம், முனைவர் ஒய். சீனிவாச ராவ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், முனைவர் ஜே. துர்காலட்சுமி, பதிவாளர், நானி பல்கிவாலா மத்தியஸ்த மையம், சென்னை, செந்தில்குமரன், ஜவர்கர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி உள்ளிட்ட புகழ்மிக்க மற்றும் அனுபவம் மிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர். கருத்தரங்க விவாதம் 9 அமர்வுகளில் நடைபெறுகிறது.        

      முழுவதும் புது தில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழக நிதியுதவியுடன் நடத்தப்படுகின்ற இந்த தேசியக் கருத்தரங்கத்தின் கருத்தரங்க விவாதங்கள் கருத்தரங்கம் நிறைவுற்ற பின்னர், கடலூரின் காலனியாதிக்க வரலாற்றை வெளிக்கொண்டுவரும் வகையில் ஒரு புத்தகமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.         

   சுமார் 350 பங்கேற்பாளர்கள், மூத்த அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். 

    நிகழ்ச்சியில், முன்னதாக பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. இராயப்பன் அவர்கள் வரவேற்றார். நிறைவாக, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக தேசியக் கருத்தரங்கத்தின் இயக்குநரும் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.     

     பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பிரபா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் தி. சிவகாமசுந்தரி, நா. தெய்வாம்சம், முனைவர் வீ. ரேவதி, முனைவர். இ. விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்கத் துவக்கவிழா துவங்கியது.

Read more...

திங்கள், 1 அக்டோபர், 2012

பெரியார் கலைக் கல்லூரியில் பருட்பொருள் அறிவியல் கருத்தரங்கு

கடலூர்:
    
        தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நிதி உதவியுடன் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பருட்பொருள் அறிவியல் கருத்தரங்கு நடந்தது.

         கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கண்ணன் தலைமை தாங்கினார். இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் மனோகரன் வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் குணசேகரன் அறிவியல் விழிப்புணர்வு தலைப்பில் பேசினார். சென்னை மாநிலக் கல்லூரில் இயற்பியல்இணை பேராசிரியர் அன்பழகன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இயற்பியல் உதவி பேராசிரியை ரேணுகாதேவி, முனைவர் கோபாலன், ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். உதவி பேராசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார். கருத்தரங்கில் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கருத்தரங்கையொட்டி வினாடி- வினா நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் திலக்குமார் செய்திருந்தார். .

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP