திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - துவக்கவிழா

பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை, 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடத்துகின்ற தேசியக் கருத்தரங்கத்தின் துவக்க விழா இன்று (01.08.2013 - வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது.      

    பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். 

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

கடலூர் நகரின் வரலற்றுச் சிறப்பு மிக்க நகரம். சோழமண்டலக் கடற்கரையில், 1748 முதல் 1752 வரையில் அதுவே ஆங்கிலேயர்களில் தலைமையிடமாக இருந்தது. கெடிலம் நதிக்கரையில் தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ள செயின்ட் டேவிட் கோட்டை இன்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தின் எச்சமாக இருக்கிறது. 1756-ல் ராபர்ட் கிளைவ் இக்கோட்டையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1653-ம் ஆண்டு இந்து வணிகர் ஒருவரால் கட்டப்பட்ட இக்கோட்டை, 1677-ல் சிவாஜி செஞ்சியைக் கைப்பற்றிய பிறகு மராத்தியர்களில் கைக்குப் போனது, பின்னர் ஆங்கிலேயர்கள் அதனை வாங்கினர். அதற்கென ஒரு புதிய முறையைக் கையாண்டனர். டேவிட் கோட்டையிலிருந்து கடலூர் நகரத்தை நோக்கி பல திசைகளிலும் பீரங்கியால் சுட்டனர். குண்டுகள் விழுந்த இடம் வரையிலான பகுதிகளைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர். அவ்வாறு குண்டு விழுந்த இடங்கள் இன்றும் குண்டு உப்பலவாடி, குண்டுசாலை, குண்டுசாவடி என்றே அழைப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் தங்களின் குடியேற்றங்களை உருவாக்கினர்.        

தேசியக் கருத்தரங்கத்தை குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்த, புது தில்லி, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக உறுப்பினரும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப்புல முதல்வரும், வரலாற்றுத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்கள் கருத்தரங்கத் துவக்க விழா உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

      கடல்சார் வரலாறு என்பது கடலில் மனிதனுடைய நடவடிக்கைகளின் பற்றிய ஆய்வாகும். அதில் தேசிய மற்றும் பிராந்திய வரலாறுகள் முதன்மையானதாக இருந்தபோதிலும், பெரும்பாலும் வரலாற்றின் ஒரு பரந்துபட்ட கருத்தியல் ரீதியிலான கூறுபாடு உள்ளடக்குகின்ற ஒரு உலகளாவிய அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றது. ஒரு கல்வி சார்ந்த பாடமாக, துறைகளின் தரநிலை எல்லைகளைத் தாண்டி பெரும்பாலும் சமுத்திரங்கள், கடல்கள், மற்றும் உலகின் முக்கிய நீர்வழிகள் என மனித குலத்தின் பல்வேறு உறவுகளைப் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது. கடல்சார் வரலாறு கப்பல்கள், சரக்குப் போக்குவரத்து, கடல் பயணம் மற்றும் மாலுமிகளை சம்பந்தப்பட்ட கடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து விளக்கமளிக்கிறது. கடல்சார் வரலாறு காலஓட்டத்தில் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. பண்டைய காலங்களில் வணிகம் மற்றும் வர்த்தகமே பெருமளவில் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. உதாரணமாக, சிந்து சமவெளி நாகரிக இடமான லோத்தலில் கப்பல் கட்டும் தொழில் நடைபெற்றது. எகிப்து, உர் மற்றும் மெசபடோமியா மற்றும் சிந்து நாகரிங்களுக்கு இடையே தீவிர வணிகரீதியான உறவுகள் இருந்தன. சங்ககாலத்தில் சங்ககால மன்னர்கள் இலங்கையின் மீது தொடர்ந்து போர் தொடுத்து அங்கிருந்து கைதிகளைக் கொண்டுவந்து காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக அவர்களைப் பயன்படுத்தினர் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. தமிழர்கள் அடிப்படையில் செல்வத்தைச் சம்பாதிக்க ஆழ்கடல்களைப் பயன்படுத்தினர். “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது தமிழ் பழமொழி ஆகும். இந்தக் கருத்தரங்கு சில முக்கிய அம்சங்களை முன்னிலைப் படுத்துகிறது. முதலில் உள்ளூர் வரலாறே அடிப்படையில் அதன் முக்கியக் கருப் பொருளாக இருக்கிறது, அதாவது, ஐரோப்பிய குடியேற்றங்கள் மற்றும் காலனியாதிக்கத்தின் போது கடலூரின் பங்கு. இரண்டாவதாக, இரண்டாவதாக, ஐரோப்பிய கடல்வழி வர்த்தகத்தின் தன்மையின் மீது அது கவனம் செலுத்துகிறது. காலனி ஆதிக்க கால கடல் வணிகமானது விவசாயத்தை வர்த்தகமயமாக்குகின்ற செயல்முறையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவிற்கு பருத்தி துணிகளை இறக்குமதி செய்தல். இந்த கருத்தரங்கமானது, துறைமுகங்கள் ஏற்படுத்தப்படுதல், வர்த்தக வழிகள், வானிலையை கண்காணித்தல், கப்பல்கட்டுமானம், புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம் போன்ற ஒரு பரந்த நோக்கெல்லையைக் கொண்டிருக்கிறது. புதுதில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில் ஆதரவில் நடைபெறும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கின் விவாதங்கள் ஒரு தொகுக்கப்பட்ட புத்தக வடிவில் வெளியிடப்படவேண்டும். தென் இந்திய கடல்சார் வரலாறு குறித்து அதிலும் குறிப்பாக தமிழ்நாடு குறித்து மிகச் சில படைப்புகளே இருக்கின்றன. இந்நிலையில் இந்தக்கருத்தரங்கின் ஆய்வுக் கட்டுரைகள், உரைகள், விவாதங்கள் நிரந்தரமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.         

      இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசியக் கருத்தரங்கில், “கடற்கரையை அளவிடுதலில் சோழ மண்டலக் கடற்கரை அனுபவங்கள்”, “காலனியாதிக்க காலத்தில் கடலூர் துறைமுக இஸ்லாமிய கடல் வணிகர்களும், தென்கிழக்காசிய வணிக வலைப்பின்னலும்”, “ஆங்கிலேயர் ஆட்சியில் கடலூர் நகரமயமாதலும், ஜவுளி வணிகமும்”, “பதினெட்டாம் நூற்றாண்டில் தென்கிழக்கு மற்றும் தூரக் கிழக்கு ஆசியாவுடன் பாண்டிச்சேரியின் கடல்சார் வாணிபம்”, “கடலூரில் கடல்சார் வாணிபம்”, “டென்மார்க் காலனியான தரங்கம்பாடியில் சமயம் மற்றும் கல்வி”, “பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெப்ப மண்டல சூறாவளிகளும் கடலூர் மாவட்டத்தில் அதன் தாக்கமும்” “ஆரம்பகாலத் தமிழகம் குறித்த அயல்நாட்டவரின் குறிப்புகள்”, “மத்திய காலத்தில் பழவேற்காடு மற்றும் நாகபட்டினம் துறைமுகங்கள்”, “வாணிபமும் சமூகமும்”, “சதுரங்கப்பட்டிணம் போர்”, “சோழமண்டலக் கடற்கறையின் கடல்சார் வாணிபம்”, “கர்நாடகத்தில் ஆங்கிலேய-பிரெஞ்சு மோதல்களும், கடலூரில் அதன் தாக்கமும்”, “தரங்கம்பாடி மீதான டென்மார்க்கின் மேலாதிக்கம்”, “மேலாதிக்கம் செலுத்துதலில் உள்ளூர் மக்களைப் பயன்படுத்துதல்”, “சோழ மண்டலக் கடற்கரையில் ஐரோப்பிய வாணிபக் கம்பெனிகளின் போட்டி”, “காலனியாக்க சக்திகளும் அவற்றின் கொள்கைகளும்”, “கடலூரில் காலனியாதிக்க கட்டடக்கலை”, “சாதி மற்றும் மதத்தின் மீது பிரெஞ்சு காலனியாதிக்கக் கொள்கைகளின் தாக்கம்”, “பரங்கிப்பேட்டையில் ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்க வாணிபம்”, “கடலூர் முற்றுகை”, “சென்னைத் துறைமுகத்தின் வரலாற்று முக்கியத்துவம்”, “கொற்கை, காயல் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களின் வளர்ச்சி”, “பறையர்களும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னை இராணுவமும்”, “மேஜர் ஸ்டிஞ்சர் லாரன்சும், புனித டேவிட் கோட்டை பாதுகாக்கப்படலும்”, “கடலூர் பிராந்தியத்தில் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி” உள்ளிட்டவை குறித்த ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.        

          கருத்தரங்கில் முனைவர் கே. ஜான்குமார், பிஷப் ஹீபர் கல்லூரி, முனைவர் என். அதியமான், தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் எஸ். ராஜவேலு, தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் எஸ்.என். நாகேஸ்வர ராவ், சர் தியாகராயர் கல்லூரி, முனைவர் எஸ். பாபு, காஞ்சி மாமுனிவர் முதுகலைப் படிப்புகள் மையம், புதுச்சேரி, முனைவர் கே. கன்னையா, கடலூர், முனைவர் எம்.மாணிக்கம், அவ்வையார் கல்லூரி, காரைக்கால், முனைவர் ஜே. ராஜா முகம்மது, முன்னாள் அருங்காட்சியக துணை இயக்குநர், தமிழ்நாடு, முனைவர் என். அழகப்பன், முதல்வர், செட்டிநாடு கல்லூரி, முனைவர் எஸ். ஜெயசங்கர், முதல்வர், ஸ்ரீ வாசவி கல்லூரி, முனைவர் ஜூலியஸ் விஜயகுமார், பொறையார், முனைவர் கே.ஆர். சங்கரன், ஏ.வி.சி. கல்லூரி, முனைவர் டி. அசோகன், பாரதிதாசன் பல்கலைக்கழகம், முனைவர் ஒய். சீனிவாச ராவ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், முனைவர் ஜே. துர்காலட்சுமி, பதிவாளர், நானி பல்கிவாலா மத்தியஸ்த மையம், சென்னை, செந்தில்குமரன், ஜவர்கர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி உள்ளிட்ட புகழ்மிக்க மற்றும் அனுபவம் மிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர். கருத்தரங்க விவாதம் 9 அமர்வுகளில் நடைபெறுகிறது.        

      முழுவதும் புது தில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழக நிதியுதவியுடன் நடத்தப்படுகின்ற இந்த தேசியக் கருத்தரங்கத்தின் கருத்தரங்க விவாதங்கள் கருத்தரங்கம் நிறைவுற்ற பின்னர், கடலூரின் காலனியாதிக்க வரலாற்றை வெளிக்கொண்டுவரும் வகையில் ஒரு புத்தகமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.         

   சுமார் 350 பங்கேற்பாளர்கள், மூத்த அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். 

    நிகழ்ச்சியில், முன்னதாக பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. இராயப்பன் அவர்கள் வரவேற்றார். நிறைவாக, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக தேசியக் கருத்தரங்கத்தின் இயக்குநரும் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.     

     பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பிரபா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் தி. சிவகாமசுந்தரி, நா. தெய்வாம்சம், முனைவர் வீ. ரேவதி, முனைவர். இ. விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்கத் துவக்கவிழா துவங்கியது.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP