கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரிக்கு வேதியியல் ஆய்வுக்கூட கட்டடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஒதுக்கியிருந்தார். அந்த நிதியில் கட்டப்பட்ட வேதியியல் ஆய்வுக்கூடத்தின் திறப்பு விழா சனிக்கிழமை (26.10.2013) காலையில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மனோகரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேதியியல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்து பேசியது:
பெரியார் கலைக் கல்லூயில் முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4016.45 சதுர அடிப் பரப்பில் புதிய வேதியியல் ஆய்வகக் கட்டடம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் ஆய்வுக்கூடம், ஆசிரியர் அறை, பொருள்கள் வைக்கும் அறை மற்றும் ரசாயன அறை ஆகியவை உள்ளன. மாணவர்கள் ஆய்வகத்தை முழுமையாகப் பயன்படுத்தி ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொண்டு தலைசிறந்த மாணவர்களாக உருவாகவேண்டும். 50–ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் இக்கல்லூரிக்கு தன்னாட்சி பெற்றுத்தர முயற்சிகள் எடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். என்.எல்.சி. நிறுவனத்திடம் இருந்து 2½ கோடி ரூபாய் கட்டிட வசதிக்காக பெற்றுத்தர ஏற்பாடு செய்வேன். இந்த நிதி கிடைக்கவில்லையெனில் வேறு சாத்தியக்கூறுகளை கண்டறியவும் நடவடிக்கை எடுப்பேன். இக்கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக 12 புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு எம்.பி.ஏ. படிப்பு கொண்டு வருவதற்கு உயர்கல்வித்துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் குமார், நகராட்சி துணைத்தலைவர் ஜி.ஜெ.குமார், கடலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி, கவுன்சிலர் பழனிச்சாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேதியியல் துறை தலைவர் ஷர்மிளா இந்திராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி தமிழ்செல்வராஜன் தொகுத்து வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்திகள்
Read more...