கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பெரியார் கலைக் கல்லூரி மாணவி இரண்டாமிடம்
கடலூர் :
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான படைப்பாற்றல் போட்டிகளில் மாணவிகளே அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் பொருட்டு தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி கடலூர், பெரியார் அரசு கல்லூரியில் நேற்று நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் 18 கல்லூரிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கவிதைப் போட்டியில் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி. கல்லூரி சுகந்தி, கடலூர் கந்த சாமி நாயுடு மகளிர் கல்லூரி தமிழ்ச்செல்வி, கட்டுரைப் போட்டியில் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி சுதா, தொழுதூர் ஆறுமுகம் கலைக் கல்லூரி ராதிகா, பேச்சுப் போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரி நந்தினி, கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவி சங்கீதா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் தமிழாழிக் கொற்கை வேந்தன் வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) மனோகரன், போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார். முதல் பரிசாக 10, 000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 7, 000 ரூபாய் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பேராசிரியர் குமரன் மற்றும் பழனிவேலுசெய்திருந்தனர்.போட்டியில் வென்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உமா நன்றி கூறினார்.
. கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக