கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் அமைச்சருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு
கடலூர் :
கடலூர் அரசு கல்லூரி மாணவர்களின் கறுப்புக் கொடி போராட்ட அறிவிப்பால் நேற்று நடந்த இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் பங்கேற்கவில்லை. அரசு கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக மடிக்கணினி வழங்கி வருகிறது. கடந்தாண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 933 பேருக்கு வழங்குவதற்காக லேப்டாப் தயார் நிலையில் உள்ளது.இதனை அறிந்த 3ம் ஆண்டு மாணவர்கள், முதலில் தங்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் எனக்கோரி கடந்த 26ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். இந்நிலையில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சம்பத், லேப் டாப் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆவேசமடைந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கடந்த 27ம் தேதி கல்லூரியிலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி நிர்வாகம், பிப்ரவரி மாதத்திற்குள் வழங்கப்படும் என்றனர். அதனை ஏற்க மறுத்த மாணவர்கள், லேப் டாப் வழங்க கல்லூரிக்கு வருகை தரும் அமைச்சர் சம்பத்திற்கு எதிராக கறுப்புச் சட்டை அணிந்தும், கறுப்புக் கொடி ஏந்தியும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக அறிவித்தனர். இருப்பினும், கல்லூரி நிர்வாகம் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப் வழங்க நேற்று ஏற்பாடு செய்தனர். அதில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்களை மட்டும் கல்லூரிக்கு வருமாறு அறிவித்தது. ஆனால், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நேற்று காலையிலேயே கல்லூரியில் கூடினர். காலை 10 மணிக்கு கல்லூரி உள்ளேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி முன் போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த தகவலை அறிந்த அமைச்சர் சம்பத்,கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்கவில்லை. சப் கலெக்டர் லலிதா, 8 மாணவர்களுக்கு மட்டும்இலவச லேப் டாப்களை வழங்கினார். மற்றவர்களுக்கு நாளை (31ம் தேதி) வழங்கப்படும் என கூறிவிட்டுச் சென்றார். விழாவிற்கு வந்த சப் கலெக்ட ரும், தங்களின் கோரிக்கையை என்ன என்றுகூட கேட்காததால் நாளையும் போராட்டத்தைத் தொடர மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக