கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி
கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
கடலூர், பெரியார் அரசு கல்லூரியில் படிக்கும் முதுநிலை மாணவர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர் பயன்பெறும் வகையில் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்க பல்கலைக் கழக மானியக்குழு நிதி ஒதுக்கீடு செய்தது. அதனைத் தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விலங்கியல் துறைத் தலைவர் ஜெயந்திதேவி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமையுரையாற்றினார். அண்ணாமலை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறைத் தலைவர் சக்திவேல் இலவச பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். துறை பேராசிரியர் பாலமுருகன், பல்கலைக்கழக மானியக்குழு தேர்வு மற்றும் தேசிய திறனறித் தேர்வின் பாடத் திட்டங்கள், தேர்வு முறைகளை விளக்கினார்.
31/12/2012 அன்று துவங்கிய இந்த பயிற்சி வகுப்பில் கல்லூரியில் முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. வரும் ஜனவரி 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், அதன் பிறகு கல்லூரி துவங்கியதும் வேலை நாட்களில் பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், விடுமுறை நாட்களில் முழு நாளும் வகுப்புகள் நடைபெறும். வரும் மே மாதம் வரை இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும்.
மாணவர்களுக்கு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு பயிற்சி வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் துணை பேராசிரியர் நிர்மல்குமார் கூறினார். கல்லூரியில் கடந்த டிசம்பர் 20ம் தேதி முதல் இந்திய ஆட்சிப் பணிக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. .
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக