கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2014-15ம் கல்வியாண்டில் புதிதாக 25 பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி வேண்டி கடிதம்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் புதிதாக 25 பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி வேண்டி கல்லூரியின் முதல்வர், கல்லூரி கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ., பி.காம்., எம்.காம்., எம்.எஸ்சி. உள்பட பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 4,095 மாணவ மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர். நடப்புக் கல்வியாண்டில், எம்.எஸ்சி. வேதியியல், பி.ஏ. அரசியல் அறிவியல், பி.எஸ்சி. நுண்ணுயிரியல் பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, வரும் கல்வியாண்டில், மேலும், புதிதாக சில பாடப் பிரிவுகளைத் தொடங்க, கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் அளித்த பேட்டி:
வரும் 2014-15ம் கல்வியாண்டில், பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன், பி.பி.ஏ., எம்.எஸ்சி., பிரிவில் புள்ளியியல், மைக்ரோ பயாலஜி, எம்.பில்., பிரிவில் வணிகவியல், பொருளியியல், வரலாறு, பி.எச்டி பிரிவில் வரலாறு, இயற்பியல், விலங்கியல் உள்பட 25 பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி வேண்டி, கல்லூரி கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில் சில பாடப் பிரிவுகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் உள்ளது. புதிய பாடப் பிரிவு தொடங்க தகுதியான ஆசிரியர்கள், நூலகம், ஆய்வக வசதிகள் போன்ற விவரங்கள் குறித்த அறிக்கைகள் கல்லூரியில் இருந்து திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பப்படும். வரும் கல்வியாண்டில் பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக