கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சுகாதாரமற்ற உணவு
கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள், சுகாதாரமற்ற உணவைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கல்லூரிக்கு அருகில் உள்ள மாணவர்கள் விடுதியில் 105 மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். இவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்கிறார்கள் மாணவர்கள் .தானே புயலில் ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்படவில்லை. உணவு தரமானதாகவும் சுகாதாரமாகவும் இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பயனில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் திங்கள்கிழமை வழங்கப்பட்ட காலை உணவு, சுதாரமற்ற நிலையிலும் துர்நாற்றத்துடனும், புழுப் பூச்சிகளுடனும் மிகமோசமாக இருந்ததாம். எனவே விடுதி மாணவர்கள் காலை உணவைப் புறக்கணித்து, கல்லூரி வகுப்புகளையும் பறக்கணித்தனர். பின்னர் விடுதி வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் பிற்பட்டோர் நலத்துறை வட்டாட்சியர் பழநி மற்றும் கடலூர் வட்டாட்சியர் எழிலன் ஆகியோர் விரைந்து வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிற்பட்டோர் மாணவர் விடுதியைச் சீரமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கி இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், சுகாதாரமான உணவு வழங்கப்படும் என்றும் வட்டாசியர் பழநி உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்துச் சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக