கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் 13.03.2014 அன்று நடந்தது.
எச்சரிக்கை
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஹெராயின், அபின், கஞ்சா போன்ற போதைப்பொருட்களை இந்தியாவுக்குள் கடத்திக்கொண்டு வருவதாகவும், இதனால், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் இந்திய புலனாய்வு அமைப்பான ‘ரா’ மத்திய அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் இளைஞர்களிடையே போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ‘ரா’ தெரிவித்துள்ளதாக தெரிகிறது. எனவே கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்களை நடத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கூடுதல் டி.ஜி.பி.கரன்சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 100 கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
விழிப்புணர்வு முகாம்
அந்த வகையில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் வி.என்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்டம் அலுவலரும் , வணிகவியல் துறைத்தலைவர் அலுவலருமான முனைவர் முருகதாஸ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் நகர கடலூர் நகர துணை காவல் ஆணையர் ராமமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
கடலூர் நகர துணை காவல் ஆணையர் ராமமூர்த்தி பேசியது:
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுவிலக்கு போலீசார், கள்ளச்சாராயம் மற்றும் மதுபோதை கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 12 வயது முதல் 21 வயது வரையிலான பருவம் மிக மிக முக்கியமான பருவம் இந்த வயதில் மனதை அலைபாய விடக்கூடாது. கல்வி கற்பதிலும் விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
ஆரம்பத்தில், போதை பழக்கம் சிலந்தி வலை போன்றது. போக போக அதுவே இரும்பு சங்கிலியாக மாறி வாழ்க்கையை முடித்துவிடும். என்னுடைய சக மாணவர் ஒருவர் படித்து நல்ல வேலையில் சேர்ந்தார், அங்கு அவர் போதைப்பொருள் பழக்கத்துக்கு உள்ளானதால், சமுதாயத்தாலும், குடும்பத்தாலும் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் இந்த நிகழ்ச்சி என்னை வெகுவாக பாதித்தது, எனவே இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகாமல் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக பேராசிரியர் நிர்மல்குமார், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் டேவிட்சவுந்தர், ஆறுமுகம், ஜெயபாலன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். முடிவில் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் நன்றி கூறினார். இதில் 300-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவும், நாட்டுநலப்பணித்திட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக