கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வரின் பிரிவு உபச்சார விழா: அதிமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் வேறு இடத்துக்கு மாற்றம்
கடலூர்:
வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெறவிருந்த கல்லூரி முதல்வரின் பிரிவுபசார விழா, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களும் கல்லூரியில் உள்ள அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்புக் கோபுரம் அமைத்து, இயந்திரத் துப்பாக்கிகள் சகிதமாக சுமார் 100 போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4 வேட்பாளர்களின் அனுமதி பெற்ற முகவர்கள் 24 மணி நேரமும் அங்கேயே தங்கி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைகளைக் கண்காணித்து வருகிறார்கள். கல்லூரியில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதனால் ஆசிரியர்கள் வந்து போகிறார்கள். இந்நிலையில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன், ஆங்கிலத் துறைத் தலைவர் நடராஜன் ஆகியோர் புதன்கிழமை பணியில் இருந்து ஓய்வுபெற்றனர். ஓய்வுபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பிரிவுபசார விழா கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதுதான் வழக்கம்.
இதனால், விழா ஏற்பாடுகளுக்காக செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு, கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் நிர்மல் குமார் காரில் கல்லூரிக்குச் சென்றார். விழாவுக்கான சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் மினி டெம்போவில் ஏற்றப்பட்டு உடன் சென்றது. பேராசிரியர் சென்ற காரையும், பொருள்கள் ஏற்றிச் சென்ற டெம்போவையும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் திடீரெனக் கும்பலாக வந்து வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர். அனுமதி பெறாமல் வாகனங்கள் கல்லூரிக்குள் செல்வதற்கு, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அந்த இரு வாகனங்களும் வெளியேற்றப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் ரங்கநாதன், பேராசிரியர் நடராஜன் ஆகியோருக்கு பிரிவுபசார விழா கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதற்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். இதன் காரணமாக பிரிவுபசார விழா, கடலூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. பணியாற்றிய கல்லூரியில், அவர்களுக்கு விழா நடத்த முடியாமல் போனதற்கு முதல்வர், பேராசிரியர்கள் பெரிதும் வருத்தமடைந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக