அரசு பெரியார் கலைக்கல்லூரியில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
தினமணி - 29.05.2015
கலை, அறிவியல்
படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால், கடலூர் அரசுக்
கல்லூரியில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை
எட்டியுள்ளது.
கடலூரில் அரசு பெரியார் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு மே 22-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி நிறைவடைந்தது. ஒவ்வொரு நாளும் பாடம் வாரியாக நடத்தப்பட்ட
கலந்தாய்வில் பங்கேற்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியதாக கல்லூரி முதல்வர்
வ.நா.விஸ்வநாதன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பாக தமிழ், ஆங்கிலம்,
வணிகவியல், பொருளியல், வரலாறு,
அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,
விலங்கியல், நுண்ணுயிரியல், புள்ளியல், கணினிஅறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள்
நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டில் 1,065 இடங்களுக்கான
கலந்தாய்வில் பங்கேற்க 4,390 விண்ணப்பங்கள் விற்பனை
செய்யப்பட்டன. கலந்தாய்வில் 3,450 பேர் பங்கேற்றனர்.
இதுவரையில் இல்லாத அளவாக கலந்தாய்வின் முதல் கட்டத்திலேயே வணிகவியல், கணினிஅறிவியல், கணிதப் பாடங்களில் அனைத்து இடங்களும்
நிரப்பப்பட்டு விட்டன. மற்ற பாடங்களில் 75 சதவீத இடங்கள்
நிரப்பியுள்ளன. கடந்த காலங்களில் முதல் கட்ட கலந்தாய்வில் அதிகபட்சமாக 50 சதவீத இடங்கள் வரையில் தான் நிரப்பும்.
இது மாணவர்களிடம் கலை, அறிவியல்
பாடத்துக்கு வரவேற்பு இருப்பதையே காட்டுகிறது. வேலைவாய்ப்பு உறுதியாக உள்ள
படிப்புகளாக இளநிலை பட்டப்படிப்புகள் மாறி வருவதோடு, குறைவான
செலவில் படிப்பினை முடித்துவிடும் சூழ்நிலை உள்ளது.
அதே நேரத்தில் அதிக செலவில் படிக்கப்படும் பொறியியில்
பட்டதாரிகள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் நிலையும் கலை அறிவியல் படிப்பில்
மாணவர்கள் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவதற்கான காரணமாக உள்ளது.
தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி குறித்தும், பாடத்திட்டம், அரசியல்,
உலக கண்ணோட்டம், ஆங்கிலம் பேசுதல், சக மாணவ, மாணவிகளுடன் நட்புறவுடன் பழகுவது குறித்து
ஜூன் 2-ஆம் தேதி முதல் சிறப்பு வல்லுநர்களால்
பயிற்சியளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில உயர்கல்வித் துறை
ஏற்பாடு செய்துள்ளது. இந்த முறை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்
என்றார்.
மே 29-ஆம்
தேதி 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. தேவைப்படும்
பட்சத்தில் 30-ஆம் தேதி 3-ஆம் கட்ட
கலந்தாய்வும் நடத்தப்படும்.
அதேபோன்று, பிளஸ்
2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுதேர்வில் வெற்றி
பெறும் பட்சத்தில் அவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்று
கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக