கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்
கடலூர், :
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில் போலீஸ் தடியடி நடத்தி கலைத்தது. துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். இதனை கண்டித்து கடலூரில் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அணுமின் நிலையம் அருகே செல்வதை தடுத்த போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். தகவல் பரவிய நிலையில் திருசெந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட திரண்ட கூட்டத்தை பார்த்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு மீனவர் பலியானார். இதனால் நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடலூரில் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் 2ஆயிரம் பேர் நேற்று (11/09/2012) வகுப்புகளை புறக்கணித்து பாதுகாப்பற்ற அணுமின் நிலையத்தை மூட வேண்டும், கடல் நீர், சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க வழிகாண வேண்டும், பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை நடவடிக்கை கண்டிப்பது, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், மக்கள் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நியாயமான தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கல்லூரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூடங்குளம் விவகாரத்தில் உரிய தீர்வு காணப்படவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக